கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 473 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், 1 பயனாளிக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.40,000க்கான ஆணையும், 1 பயனாளிகளுக்கு பட்டா உட்பட 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பயனாளிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் பத்மபிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.