மேல்மருவத்தூரில் நடைபெறவுள்ள இருமுடி கட்டுதல் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் தற்காலிக நிறுத்தத் தேதிகளில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

இது குறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இருமுடி கட்டுதல் மற்றும் தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காகக் குறிப்பிட்ட ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதில் 2 ரயில்களின் தற்காலிக நிறுத்தத் தேதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய நிறுத்தத் தேதிகள் விவரம்:

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ்: வரும் ஜனவரி 3, 5, 7, 10, 12, 14, 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ்: வரும் ஜனவரி 2, 3, 7, 9, 10, 14, 16, 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும்.

பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.