சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இத் திட்டத்தினைத் தொடங்கி வைப்பதற்காக மதுரை வந்த முதலமைச்சர் விஜய்க்கு, விமான நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை செல்லும் வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மீனாட்சி அம்மன் வேடமணிந்து நின்ற பெண் குழந்தையைக் கையில் தூக்கி வாஞ்சையுடன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை வளாகமே விழாக்காலம் பூண்டிருந்தது. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் விஜய் பங்கேற்று முதல்கட்டமாக மும்மதங்களையும் சேர்ந்த தாய்மார்களின் கைகளில் இருந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்தார்.

தொடர்ந்து மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த தாய்மார்களிடம் நேரடியாகச் சென்று குழந்தைகளுக்கத் தங்க மோதிரங்களை வழங்கினார். அப்போது சில பெற்றோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டியும், குழந்தைகளைத் தூக்கிப் கொஞ்சியும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

உணர்ச்சிப் பெருக்கில் அழுத தாய் ஒருவரை முதலமைச்சர் அணைத்து ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பயனடைந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் குழுப் புகைப்படமும், 'செல்ஃபி' புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.