உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (செப்டம்பர் 17) காலை மிக விமரிசையாக நடைபெற்றது. இக்குடமுழுக்கு விழாவைக் காணத் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரண்டனர்.
கோவிலில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பல மாதங்களாகத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டது. வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளின் புனிதநீர் நிரப்பப்பட்ட கடங்கள் வைக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தினர்.
கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி முதல்கால யாகபூஜை தொடங்கிய நிலையில், நேற்று 10-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, யானை மற்றும் டங்கா மாடு அணிவகுக்கக் கடங்கள் புறப்பாடாகி, காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்குப் புனிதநீர் ஊற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 12-ஆம் கால யாகபூஜை நிறைவுற்று, காலை 5.45 மணிக்குக் கடங்கள் புறப்பாடாயின. சிவாச்சாரியார்கள் புனிதநீர் கடங்களை 4 ராஜகோபுரங்கள் உள்ளிட்ட 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்குக் கொண்டு சென்றனர்.
காலை 7.40 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க 12 கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. காலை 8.10 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்குப் புனிதநீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8.50 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர்களுக்குச் சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இன்று காலை 10 மணி முதல் இரவு வரை நடை சாத்தப்படாமல் பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்றிரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் நான்கு மாசி வீதிகளிலும் வீதி உலா வந்து காட்சி அளிக்கின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

