திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்குறள் முற்றோதல் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டு மாநில அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற 19 மாணவர்களும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற 2 மாணவர்களும், 5 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், தெரிவித்ததாவது: திருக்குறள் என்பது வெறும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் நூல் மட்டுமல்ல. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறம், ஒழுக்கம், அன்பு, ஈகை, பொறுமை, கல்வி, நட்பு, உழைப்பு உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் உயரிய நூலாகும். திருக்குறளைக் கற்றறிந்து அதன் பொருளை உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றுவதன் மூலம் மாணவர்களிடையே நல்லொழுக்கம், மனிதநேயம், ஒழுக்கச் சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய நற்பண்புகளை வளர்க்க முடியும்.

மேலும், மாணவர்கள் இளம் வயதிலேயே திருக்குறளைப் படித்துப் பொருள் உணர்ந்து கொள்வது அவர்களின் அறிவாற்றல், சிந்தனைத் திறன் மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதோடு, எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக உருவாகவும் வழிவகுக்கும். தமிழ் மொழியின் தொன்மை, இலக்கிய வளம் மற்றும் பண்பாட்டுப் பெருமைகளை மாணவர்கள் அறிந்துகொள்ள இதுபோன்ற தேர்வுகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களிடையே திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி, திருக்குறள் முற்றோதல் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜ், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.