கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (28.09.2026) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு,.பிரதாப், அவர்கள் கலந்துகொண்டு, பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் கடந்த ஜீன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் இன்று மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களுக்குத் தனியார் மருத்துவமனைகளால் ஏற்படும் நிதிச் சுமைகளைக் குறைத்து, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகளின் சேவைகளைப் பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டம் ஜூன் 22 அன்று அறிவிக்கப்பட்டதால், அன்றிலிருந்து இன்றுவரை நமது மாவட்டத்தில் பிறந்துள்ள 1,401 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி (Chart), அடுத்த 12 முதல் 13 நாட்களுக்குள் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டு, தாய்மார்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு வரவழைக்கப்பட்டு மோதிரங்கள் வழங்கப்படும்.

இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 குழந்தைகளுக்கும், பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 15 குழந்தைகளுக்கும், குழித்துறை அரசு மருத்துவமனையில் 15 குழந்தைகள் என மொத்தம் 60 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்து வீடு திரும்பும் (Discharge) குழந்தைகளுக்கு அன்றைய தினமே காலை 11 மணிக்கு வார்டுகளிலேயே தங்க மோதிரம் வழங்கி அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்த மருத்துவக் கல்லூரி முதல்வர், மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், அவர்கள் பேசினார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட் (குளச்சல்), ஆர்.செல்லசுவாமி (பத்மநாபபுரம்), நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம், இணை இயக்குநர் (தேசிய சுகாதார இயக்கம்) கிருஷ்ணா லீலா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், மாநகராட்சி உறுப்பினர் ஸ்ரீலஜா, துறை அலுவலர்கள், தாய்மார்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.