பொட்டலூரணி கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழுவின் சங்கரநாராயணன் தலைமையில் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பொட்டலூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர் விவசாயிகளுக்குச் செக்காரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முதன்மை அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இச்சங்கத்தில் புதிய உறுப்பினராகச் சேருவதற்கு விண்ணப்பம் கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் நேரில் சென்றும், அதன் செயலாளர் ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி விண்ணப்பங்களை வழங்க மறுத்து வருகிறார். மேலும், விவசாயிகளுக்கான இடுபொருள்களை முறையான வழிகளில் வழங்காமல் வியாபாரிகளுக்குக் கைமாற்றி விடுவதாகவும், விவசாயக் கடன் ஒதுக்கீட்டு நிதியை உறுப்பினர்களுக்குச் சமமாகப் பகிர்ந்து வழங்காமல் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கி முறைகேடு செய்து வருகிறார்.
தூத்துக்குடி - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தவித விவரங்களும் குறிப்பிடப்படாமல் சட்டவிரோதமாகப் பயணச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அப்பயணச் சீட்டுகளில் பொட்டலூரணி நிறுத்தத்தின் பெயரும் குறிப்பிடப்படுவதில்லை.
மேலும், தமிழகத்தின் பிற வழித்தடங்களைப் போலன்றி, தூத்துக்குடி - திருநெல்வேலி வழித்தடப் பேருந்துகளின் பக்கவாட்டில் செல்லும் ஊர்களின் பெயர்களை எழுதாமல் இயக்க அதிகாரிகள் அனுமதி அளித்து வருகின்றனர்.
காட்டுப்ப பகுதியில் அமைந்துள்ள பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். போராட்டக் களத்திற்கு வந்த அதிகாரிகள் உறுதியளித்தும் இதுவரை மின்விளக்கு அமைத்துத் தரப்படவில்லை.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி உடனடியாகப் பொட்டலூரணி விலக்கில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்துத் தர வேண்டும் என்றும், கூட்டுறவுச் சங்க முறைகேடுகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

