தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து குடும்ப ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்கள் அம்பிகா - ராதா சகோதரிகள். இவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை ராதா சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: "நான் 'ஆர்.ஆர் கார்டன்' என்ற பெயரில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறேன். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் வளசரவாக்கத்தில் உள்ள எனது வீட்டின் தரைத்தளப் பகுதியில் தங்குவது வழக்கம். எனது சகோதரி அம்பிகா நாயரும் அதே வீட்டின் தரைத்தளத்தில் தங்கியிருந்ததால், குடும்ப உறவுமுறை காரணமாக எனது பகுதிக்கு வந்து செல்ல அவருக்கு அனுமதி அளித்திருந்தேன்.

தொழிலாளர்களின் சம்பளம், மின்கட்டணம், சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணம், தோட்டம் பராமரிப்புச் செலவுகளுக்காகக் கையொப்பமிட்ட 5 அல்லது 6 காலிக் காசோலைகளை (Blank Cheques) எனது அறையில் வைப்பது வழக்கம். 'ஆர்.ஆர் கார்டன்' என்ற பெயரில் புதிய காசோலை புத்தகம் பெறப்பட்டுத் தற்போது அதனையே பயன்படுத்தி வருகிறேன்.

இத்தகைய சூழலில், கடந்த 17-ஆம் தேதி எனது வங்கிக் கிளையிலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், எனது காலிக் காசோலைகள் எனது சகோதரி அம்பிகா நாயரின் பெயருக்கு ரூ. 46 கோடி தொகையுடன் பணமாக்குவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு அக் காசோலைகள் திருடப்பட்டவை எனக் கூறி, அதன் பணப் பரிவர்த்தனையை நிறுத்தி வைக்குமாறு கோரினேன்."

மேலும் அப் புகாரில், "எனது சகோதரி அம்பிகா நாயரும், எனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயரும் சட்டவிரோதமாகப் பயனடையும் நோக்கில் கூட்டுச்சதி செய்து, நான் இல்லாத நேரத்தில் எனது அறைக்குள் அத்துமீறி நுழைந்து கையொப்பமிட்ட காலிக் காசோலைகளைத் திருடியுள்ளனர். அதில் தங்களுக்கு விருப்பமான தொகை மற்றும் தேதியை நிரப்பி வங்கியில் தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இப் புகார் தொடர்பாக சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.