தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த சுமன் என்பவர், திருச்செந்தூர் அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு எதிரே கடந்த 20 ஆண்டுகளாகக் 'கிரில் ஒர்க்ஸ்' கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கடையில் பணிகள் நடைபெற்று வந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டது. இதனால் கடையில் வைக்கப்பட்டிருந்த பெயிண்ட், டின்னர் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றில் தீப்பொறி பட்டுத் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

கடையிலிருந்து தீ கட்டுக்கடங்காமல் வேகமாகப் பரவி, அங்கிருந்த இயந்திரங்கள் மீது பிடித்துக் கடை முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாக மாறியது. இச்சம்பவம் குறித்து உடனடியாகத் திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடித் தீயை முழுமையாக அணைத்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், தீ விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான கிரில் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் முற்றிலும் தீயில் கருகிச் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்துப் திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.