தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வக்கணேஷ், திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கடந்த 2025 ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கவின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாகச் சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சுர்ஜித்தின் பெற்றோரான காவல் துறை உதவி ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

தங்களுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒரு குற்றவியல் வழக்கு எவ்வாறு கையாளப்படக் கூடாதோ, அவ்வாறு இந்த வழக்கு கையாளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுக் கூறி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.