மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி மினி லாரி ஒன்று இன்று (செப்டம்பர் 19) சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் கலைக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். லாரியின் முன்பக்க இடதுபுற இருக்கையில் லாரியின் உரிமையாளரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் காசிலிங்கம் (56) அமர்ந்திருந்தார்.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதி நான்குவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாகக் காய்கறி லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இக் கோர விபத்தில் லாரியின் இடதுபக்கம் பலத்த சேதமடைந்ததில், அங்கு அமர்ந்திருந்த லாரி உரிமையாளர் காசிலிங்கம் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் கலைக்குமார் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர், லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த காசிலிங்கத்தின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்துப் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

