கேரளாவில் கோட்டயம், மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இடுக்கி மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினரான சின்னம்மாள் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுற்றுலா சென்ற சென்னை பெண் பலி:

இதேபோல், சென்னையைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் தனது நண்பர்களுடன் கேரள மாநிலம் வாகமண் பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு இளம்பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்:

இதனிடையே, மலப்புரம் மாவட்டத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை திடீரென வந்த காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், நேற்று ஒருவரது உடலையும், இன்று அதிகாலை காணாமல் போன 3 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசிம் (31), கருவாரக்குண்டு பகுதியைச் சேர்ந்த ரகிம் (33), வண்டூர் பகுதியைச் சேர்ந்த சஜாப் (23) மற்றும் ராபின் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சாஹிதா (41) என்ற பெண்ணையும் வெள்ளம் அடித்துச் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.