உலகச் செவித்திறன் குறைபாடு தினத்தை முன்னிட்டு, 1 சதவீத இடஒதுக்கீடு மற்றும் மாதாந்திர உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு காதுகேளாதோர் உரிமை நலச் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காதுகேளாதோர் உரிமை நலச் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளர் தங்கராஜ் மற்றும் மாவட்டப் பொருளாளர் சிவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாதந்தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறைகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களைக் கட்டாயம் நியமிக்க வேண்டும்.
காது கேளாதோருக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். காவல் துறையில் புகார் அளிக்க ஏதுவாக 'வாட்ஸ்அப்' வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தால் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் சைகை மொழிப் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

