நாகர்கோவிலைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் சென்னைக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற நிலையில், தான் காதலனுடன் செல்வதாகவும் 2 ஆண்டுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்வதாகவும் தாயாருக்கு வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு மாயமாகியுள்ளார்.

நாகர்கோவில் வட்டவிளை பகுதியைச் சேர்ந்த 22 வயதான பட்டதாரி இளம்பெண் ஒருவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாக வீட்டில் கூறிவிட்டு, கடந்த 27-ஆம் தேதி மாலை சுமார் 3 மணியளவில் பேருந்தில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவர் வேலைக்குச் செல்வதாகவே நம்பியிருந்தனர்.

இந்நிலையில், அன்றைய தினம் மாலை சுமார் 6 மணியளவில் அந்த இளம்பெண்ணின் கைப்பேசியிலிருந்து அவரது தாயாருக்கு வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய இளம்பெண், "நான் வேலைக்கு எங்கு செல்லவில்லை; என்னைக்காதலித்த நபருடன் செல்கிறேன். நாங்கள் இருவரும் இரண்டு வருடம் கழித்துத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்" என்று கூறியுள்ளார்.

மகளை வேலைக்கு அனுப்பிய நிலையில் திடீரென வந்த இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார், உடனடியாகத் தனது மகளின் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அப்போதே அந்தச் செல்போன் சுவிட்ச் ஆப் (Switch off) செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் கண்ணன், உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார், இளம்பெண் எங்கு சென்றார்? உண்மையில் அந்த வாய்ஸ் மெசேஜ் அவர்தான் அனுப்பினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், இளம்பெண்ணின் தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, சைபர் கிரைம் உதவி மூலம் செல்போன் டவர் சிக்னலைக் கொண்டு அவரது இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.