தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கம், எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டுக் குழு, ஹெல்ப் ஏஜ் இந்தியா, பாஸ்கடான், தென்காசி மூத்தோர் மன்றம் மற்றும் ராஜபாளையம் மூத்தோர் நல சங்கம் ஆகியவை இணைந்து ராஜபாளையத்தில் மூத்தோர் நல விழிப்புணர்வு முகாமினை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கத்தின் நிறுவனரும், எம்பவர் இந்தியா அமைப்பின் செயல இயக்குநருமான சங்கர் தலைமை தாங்கினார். ராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத் தலைவர் பெத்ராஜா வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான ஜெகதீஸ்வரி முகாமினை தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "மூத்தோர் நலனில் தமிழ்நாடு அரசு மற்றும் சமூக நலத்துறை மிகுந்த அக்கரையோடு செயல்பட்டு வருகிறது; மூத்த குடிமக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்" என உறுதியளித்தார்.

அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிப்பு:

நிகழ்ச்சியின் போது, மூத்த குடிமக்களின் நலன் காக்க பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மூத்த குடிமக்கள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவைத் தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும்.

மூத்த குடிமக்கெனத் தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும் மற்றும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். கிராமப் புறங்களிலும் முதியோர் இல்லங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர ஓய்வு மையங்களை உருவாக்க வேண்டும். மூத்த பெருமக்களுக்காக உழைக்கும் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிக்க ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது, ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் மருத்துவச் சிகிச்சைக்கான சிறப்புத் துறை மற்றும் இறுதி காலப் பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாஸ்கடான் தலைவர் ராமாராவ், தென்காசி மூத்தோர் மன்றத் தலைவர் அழகர் ராஜா, பாஸ்கடான் செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் செயலாளர் தேவராஜா நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் திரளான மூத்த பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.