திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் கந்த சஷ்டி யாகசாலையைத் தற்போதைய இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற இடைக்காலத் தடை விதித்துச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த சிவராம சுப்பிரமணியன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: "திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் நிலைநாட்டப்பட்ட பழக்கவழக்கங்கள், சமயச் சடங்குகள் மற்றும் ஆகமங்கள் நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இவற்றுக்குப் முரணாகச் சஷ்டி யாகசாலையை அதன் தற்போதைய இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையானது கோயிலின் ஆகமக் கொள்கைகளுக்கு முரணானதாகும். எனவே சஷ்டி யாகசாலையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என உத்தரவிட வேண்டும்". என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: "இந்த வழக்கை பொறுத்தவரை யாகசாலையின் இருப்பிடம் தொடர்பான கோயிலின் பயன்பாட்டைப் கோயில் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் பின்பற்ற வேண்டியது விதியே தவிர, விதிவிலக்குகள் அல்ல.

இதுகுறித்துத் தீர்மானிக்க ஒரு பெரிய அமர்வை அமைப்பது குறித்துப் பரிசீலிக்கச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். யாகசாலையை வேறு எந்த இடத்திற்கும் மாற்றுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவை நாங்கள் வழங்குகிறோம். வேறு விதமாகக் கூறினால், இந்த ஆண்டு மற்றும் வரும் ஆண்டுகளுக்கான கந்த சஷ்டி யாகசாலை பூஜையானது வழக்கமான இடத்திலேயே நடைபெறும்". இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.