தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள தமிழ் சாலையின் தென்புறப் பகுதி நடைபாதையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியின்போது அங்கிருந்த குடிநீர் விநியோகக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது.
இருப்பினும், பேவர் பிளாக் பதித்து முடித்த பின்னரும் உடைந்த குடிநீர் குழாய்களைச் சரிசெய்யாமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக விட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாகச் சுமார் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வீணாக வெளியேறி, சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கான நீர் இவ்வாறு தெருவில் வீணாவது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் தொடர்ச்சியாகத் தண்ணீர் தேங்குவதால் அப்பகுதியில் சேறும் சகதியும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல முடியாமல் அப்பகுதி வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உடைந்த குடிநீர் குழாய்களைச் சீரமைத்து வீணாகும் குடிநீரைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

