தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (40). இவரது கணவர் கிருஷ்ணசாமி இறந்துவிட்ட நிலையில், பேச்சியம்மாள் தனது மாமியார் சித்திரை வடிவுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், விவசாயப் பயிர்களுக்குக் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக, பேச்சியம்மாளுக்கும் அவரது உறவினரான கொம்பையா பாண்டியன் மகன் மாரிமுத்து (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, பேச்சியம்மாளைக் கையால் தாக்கி, அவரை அருகில் இருந்த கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பேச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலையப் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரிமுத்துவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

