தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டணம், பிரசாத் நகரைச் சேர்ந்தவர் கந்தபிச்சை மகன் வேல்குமார் (56). இவர் பிரசாத் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக வேல்குமார் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலையப் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

