‘முத்துநகரம்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடியைக் ‘கொலை நகரம்’ என்று மாற்றுவதா என வினவியுள்ள திமுக எம்.பி. கனிமொழி, காவல்துறையைத் திறமையான ஒருவரிடம் முதலமைச்சர் விஜய் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தூத்துக்குடியில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடந்துள்ள கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் (வளைதளம்) பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழி எம்.பி.யின் எக்ஸ் தளப் பதிவு விவரம்:
"நேற்றைய தினம் தூத்துக்குடி கந்தன் காலனியில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு நாட்களில் ஏழு கொலைகள் எனத் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து, பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்துள்ளனர்.
'முத்துநகரம்' என்று அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடியை, 'கொலை நகரம்' என்று அழைக்கும் நிலைக்குத் தவெக அரசு தள்ளியுள்ளது. மீண்டும் சொல்கிறேன்... முதலமைச்சர் விஜய்; பொதுமக்கள் மீது கருணை காட்டி, காவல்துறையைச் சரியாக நிர்வகிக்கத் தெரிந்த ஒருவரிடம் அதன் பொறுப்பை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்!" என்று அவர் தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

