தூத்துக்குடி அருகே 17 வயது மாணவியைக் காதலித்த விவகாரத்தில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மனவேதனையடைந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (20). இவர் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலிஸார் தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்திய போலீஸார், "மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும்" என்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
காவல் நிலைய விசாரணைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பிய தமிழ்ச்செல்வன், காதலியிடம் இருந்து தன்னைப் பிரித்தது மட்டுமின்றி போலிஸிலும் புகார் அளித்துவிட்டார்களே என்ற கடும் மன உளைச்சலிலும் வேதனையிலும் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டின் அறையில் தமிழ்ச்செல்வன் திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸார்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தமிழ்ச்செல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

