கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் முக்கியப் போக்குவரத்து மையமாகத் திகழும் இரணியல் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2-வது நடைமேடை மேம்பாலம் (FOB) அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆண்டுக்குச் சுமார் ரூ. 6 கோடி வரை வருவாய் ஈட்டும் என்எஸ்ஜி-5 (NSG-5) பிரிவைச் சேர்ந்த இரணியல் ரயில் நிலையத்திற்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நெய்யூர் சர்வதேச மருத்துவமனை, பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் மணவாளக்குறிச்சி மணல் ஆலை போன்ற முக்கிய இடங்களிலிருந்தும், குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகளிலிருந்தும் ஏராளமான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
தற்போது புதிய பயணச்சீட்டு அலுவலகம் அமைக்கப்பட்ட இடத்திலிருந்து அடுத்த நடைமேடைக்குச் செல்ல பயணிகள் சுமார் 1 கி.மீ தூரம் நடக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் பலர் ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடந்து சென்று வந்தனர்.
இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் திருவனந்தபுரம் மார்க்கத்தில் மின்சார வாரிய அலுவலகம் அருகே 2-வது நடைமேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 முக்கியக் கோரிக்கைகளை குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தெற்கு ரயில்வேக்குக் கடிதம் மூலம் முன்வைத்தது.
தெற்கு ரயில்வே பதில் மனு:
பயணிகள் சங்கத்தின் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு அதிகாரி, இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடை மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி (Tender) கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் 5 முக்கியக் கோரிக்கைகள்:
2-வது நடைமேடை மேம்பாலம்: மின்சார வாரிய அலுவலகம் மற்றும் பரம்பை கிராம சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பது.
ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மையம்: மேம்பாலத்தின் மையப் பகுதியிலேயே பயணச்சீட்டு மையம் அமைத்துத் திருட்டுகளைத் தடுப்பதுடன் பாதுகாப்பை அதிகரிப்பது.
பல்வகை போக்குவரத்து இணைப்பு: திங்கள்நகர் - அழகியமண்டபம் சாலையில் செல்லும் பேருந்துகள் ரயில் நிலைய வளாகத்திற்குள் வந்து செல்ல மினி பேருந்து நிறுத்தமும், ரவுண்டானாவும் அமைப்பது.
நடைமேடை 1-ஐ நீட்டித்தல்: மேம்பால அடிவாரம் வரை நடைமேடை 1-ஐ நீட்டித்து, அனைத்து நடைமேடைகளையும் சம அளவில் அமைப்பது.
டிஜிட்டல் தகவல் பலகைகள்: உள்ளூர் பேருந்து வசதி மற்றும் வழிகாட்டல்களைக் காட்டும் டிஜிட்டல் தகவல் பலகைகளை நடைமேடைகளில் அமைப்பது.
இதில் மேம்பாலக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 கோரிக்கைகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் பரிசீலனையில் உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

