கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், இன்று (23.09.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்ஒருபகுதியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2.29 கோடி மதிப்பில் ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் - இராஜாக்கமங்கலம் - குளச்சல் - ஆசாரிப்பள்ளம் சாந்தபுரம் சாலை வழியாக அனந்தன்நாடார் குடியிருப்பு பகுதி சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இன்று இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனந்தன்நாடார் குடியிருப்பு பகுதியில் ஒற்றை வழிச்சாலை இடைநிலைச் சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சிறு பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது. தற்போது தார் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அளந்தங்கரையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் இறகுப்பந்து (பேட்மிண்டன்) மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இக்கட்டுமானப் பணிகள் லினெட்டல் மட்டம் (Lintel level) வரை நிறைவடைந்துள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் பணிகள் அனைத்து பணிகளையும் முடித்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தபட்பட்டது.

மேலும் ஆத்திகாட்டுவிளை ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் நகர்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.8.64 இலட்சம் மதிப்பில் ஆத்திகாட்டுவிளை கடற்கரை சாலை முதல் கேசவன்புதூர் சாலை வரை உள்ள சாலையை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கேசவன்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட புத்தன்துறையில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ பயனாளர்கள் வந்து செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் டென்னிஸ், உதவி பொறியாளர் வித்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், பொறியாளர்கள் சாந்தி, கெப்சி பாய், சாலை ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.