வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிட, இளையராஜா இசையமைப்பில் உருவான ‘கோந்தல்’ (Gondhal) எனும் மராத்தியத் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் சந்தோஷ் தவக்கர் இயக்கத்தில் உருவான இத் திரைப்படம், மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடத்தப்படும் ‘கோந்தல்’ எனும் பாரம்பரியச் சடங்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத் திரைப்படம், 56-ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) சிறந்த இயக்குநருக்கான ‘சில்வர் பீக்காக்’ விருதை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
99-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான சர்வதேசத் திரைப்படப் பிரிவில் (Best International Feature Film) இந்தியா சார்பில் பங்கேற்க ‘கோந்தல்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) முறைப்படி அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்குச் ச்வாஸ் (2005), ஹரிஷ்சந்திரச்சி ஃபேக்டரி (2009) மற்றும் கோர்ட் (2015) ஆகிய 3 மராத்தி திரைப்படங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4-ஆவது மராத்தி படமாக இளையராஜாவின் இசையில் உருவான ‘கோந்தல்’ இப் பெருமையை அடைந்துள்ளது.

