தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, செய்தி சேகரிக்கச் சென்ற 3 பெண் பத்திரிகையாளர்கள் டெல்லி போலீஸாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இப்புகார்கள் குறித்துப் பாரபட்சமின்றி விசாரிக்க வழக்கைக் குற்றப்பிரிவுக்கு மாற்றி டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்: "போராட்ட நிகழ்வு விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, உதவி காவல் ஆணையர் விவேக் பகத் என்பவரால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டேன். போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்திய இடத்தில் பெண் காவலர்கள் யாரும் இருக்கவில்லை.
பெண் காவலர்கள் இல்லாதது குறித்து ஏசிபி விவேக் பகத்திடம் கேட்டேன். அதையடுத்து அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்து தள்ளிவிட்டார். இது குறித்து புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கக் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இச்சம்பவம் குறித்துப் புது டெல்லி மாவட்டக் காவல்துறையிடம் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, நியாயமான மற்றும் ஒருதலைசார்பற்ற விசாரணைக்காகப் புகார்கள் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புகார்தாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அறிக்கைகளைப் பதிவு செய்து குற்றப்பிரிவு விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து ஊடக அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்: "ஜனநாயகத்தில் இது போன்ற நடவடிக்கைகளை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியாது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக, அச்சமின்றிப் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.
டெல்லியின் மையப்பகுதியில் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்படுவதும், அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதும் ஊடக சுதந்திரத்திற்கு உகந்தது அல்ல. பெண் பத்திரிகையாளர்களின் புகார் மீது டெல்லி போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

