இந்தியாவில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் நடிகை ஹேமமாலினி போட்டியிட்ட மதுரா தொகுதியிலும், 2019 தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் ஒரே பெயரைக் கொண்ட பெயர் மாதிரி 'போலி' (Dummy) வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். வாக்காளர்களைக் குழப்பி வாக்குகளைப் பிரிக்கும் இத்தகைய உத்தி தற்போது அமெரிக்க இடைக்காலத் தேர்தலிலும் ஊடுருவியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி சார்பில் டேனியல் சல்லிவன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் மேரி பெல்டோலா களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் சல்லிவனின் பெயரிலேயே 3-வதாக ஓர் ஆசிரியரும் வேட்பாளராகக் களம் காண்கிறார். இவர் ஜனநாயகக் கட்சியின் தூண்டுதலால் வாக்காளர்களைக் குழப்புவதற்காகவே போலி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள டிரம்ப் தரப்பினர், அலாஸ்காவில் நடைபெறும் இந்த ஓட்டு மோசடி குறித்து நீதித்துறை உடனடியாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்: "அலாஸ்கா ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சி வேட்பாளர் சல்லிவனுக்குச் செல்ல வேண்டிய வாக்குகளைப் பிரிப்பதற்காகப் போலி வேட்பாளரை நியமித்து வாக்காளர்களைக் குழப்ப முற்பட்டுள்ளனர்.

இது மிக உயர்மட்ட அளவிலான ஓட்டு மோசடியாகும். அமெரிக்கத் தேர்தல்களில் இதுபோன்ற முறைகேடான நடத்தைகளைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.