தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விவகாரத்தில், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை, நவம்பர் 27) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் (அம்பை), பெருந்துறை ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களை எதிர்த்துத் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்தத் தடையை நீக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பை வாசித்தனர்.
அதன்படி, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும், அத்தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் முடிவடைந்தால் மட்டுமே அங்குத் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கொளத்தூருடன் சேர்த்து 3 தொகுதிகளுக்குத் தேர்தல் அறிவிப்பு?சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஸ். பாபு மறைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதியும் காலியாக உள்ளதால், அம்பை, பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுடன் சேர்த்து கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

