உத்தர பிரதேச மாநிலத்தில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வீட்டில் பிளாஸ்டிக் பேரல்களில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி ரொக்கப் பணத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பராய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராகேஷ் யாதவ். ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த இவர், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் குறைந்த ஊதியத்திற்கு ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், திடீரென தனது சொந்த கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 14 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியதுடன், ரூ.1 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடும் கட்டி ஆடம்பர வாழ்க்கைக்கு மாறினார். சாதாரண நகைக்கடை ஊழியருக்கு திடீரென கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது எவ்வாறு என்பது குறித்து காவல்துறையினருக்குக் கடும் சந்தேகம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட போலீசார் ராகேஷ் யாதவின் வீட்டைச் சுற்றி வளைத்துத் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் பூமிக்கடியில் 3 நீல நிற பிளாஸ்டிக் பேரல்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்த பேரல்களைத் தோண்டி எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பணம் எண்ணும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பேரல்களில் மொத்தம் ரூ.5 கோடிக்கும் அதிகமான பணம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இப்பணத்தைக் பறிமுதல் செய்த காவல்துறையினர், ராகேஷ் யாதவ் மற்றும் அவரது தம்பி ராஜேஷ் யாதவ் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். இது குறித்துப் பேசிய காவல்துறை துணை ஆணையர் சோனம் குமார்: "பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி பணத்திற்கு ராகேஷ் யாதவ் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. அவர் திடீர் பணக்காரராக மாறியது மற்றும் பணத்தின் பின்னணி குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது"எனத் தெரிவித்தார்.

மேலும், இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளும் தனியாக தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.