அசல் மற்றும் வட்டியைச் செலுத்திய பிறகும் நகைகளைத் தராமல் தலைமறைவான நகை அடகுக் கடை உரிமையாளர் மீது நெல்லை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாலாட்டின்புதூரைச் சேர்ந்த ஹரி பாலகிருஷ்ணன் மனைவி சாந்தி மற்றும் தீத்தம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: "கோவில்பட்டி துளசி மருத்துவமனைக்கு எதிரே திருப்பதி குமார் என்பவர் நகை அடகுக் கடை நடத்தி வந்தார்.

அவரிடம் நாங்கள் நகைகளை அடமானம் வைத்திருந்தோம். பின்னர், அதற்கான அசலையும் வட்டியையும் அவரிடம் முழுமையாகச் செலுத்தி விட்டோம். ஆனால், அவர் எங்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு நகைகளைத் தராமல் திடீரெனத் தலைமறைவாகிவிட்டார். எங்களைப் போல் பலரிடமும் ஏமாற்றிய அந்த நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 லட்சமாகும்.

இது குறித்து நாங்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், போலீசார் அடகுக் கடை உரிமையாளரைப் பிடித்து விசாரணை நடத்துவது போல் பாவனை செய்து, அவரைத் தப்பவிட்டு விட்டனர்.

இச்சம்பவம் குறித்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும், கோவில்பட்டி ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் நியூட்டன் ஜெபராஜ் ஆகிய இருவரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, தலைமறைவாக உள்ள திருப்பதி குமாரை உடனடியாகக் கைது செய்து, எங்களது நகைகளை மீட்டுத் தரக் காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.