தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை ஆட்சியரைச் சந்திக்க விடாமல் தடுத்து, இடைத்தரகராகச் செயல்படும் நபர் மீது நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளரும் செய்தி தொடர்பாளருமான எம். சுடலைமணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 28.09.2026 அன்று குலசேகரப்பட்டினம் திருவிழாவிற்காக வரும் 21.10.2026 அன்று உள்ளூர் பொதுவிடுமுறை விடக் கோரி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தேன்.

அப்போது, பெயர் பலகையோ அல்லது அடையாள அட்டையோ இன்றி கோர்ட் சூட் அணிந்து வந்த பாண்டியன் என்ற தனிநபர், என்னை ஆட்சியரைச் சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தினார். அரசுப் பணியில் இல்லாத இவர், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவது BNS சட்டம் 202-ன் கீழ் அரசு ஊழியர் அல்லாத நபர் இடைத்தரகராக இருந்து வாணிபத்தில் ஈடுபடுவது போல் உள்ளது. இவர் மூலமாக ஆட்சியர் அலுவலக முக்கிய அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

எனவே, இடைத்தரகராகச் செயல்படும் பாண்டியன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், அவர் இடைத்தரகராகச் செயல்படுவதை வீடியோ ஆதாரங்களுடன் சேகரித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்படும். மேலும், இது தொடர்பான ஆதாரங்கள் தமிழக முதல்வருக்கும் புகாராக அனுப்பப்படும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.