20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்திய அணி 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வேட்டையாடிப் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்தது.
முன்னதாக, 2023-ல் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா 28 தங்கம் உட்பட 106 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், இம்முறை அதைவிட 21 பதக்கங்கள் குறைவாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனா முதலிடம் – பதக்கப் பட்டியல் விவரம்:
சீனா: 169 தங்கம், 89 வெள்ளி, 83 வெண்கலம் என மொத்தம் 341 பதக்கங்களைக் குவித்து முதலிடத்தைப் பிடித்தது.
ஜப்பான் (போட்டியை நடத்திய நாடு): 83 தங்கம், 95 வெள்ளி, 91 வெண்கலத்துடன் மொத்தம் 269 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தது.
தென்கொரியா: 39 தங்கம், 43 வெள்ளி, 68 வெண்கலம் என மொத்தம் 150 பதக்கங்களைக் கைப்பற்றி 3-வது இடத்தைப் பிடித்தது.
இந்திய வீராங்கனைகளின் சாதனை:
இந்தியாவின் சார்பில் பங்கேற்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா 3 பதக்கங்களை வென்று அசத்தினார். நிறைவு விழாவில் இந்திய அணியின் சார்பில் தேசியக் கொடியை நீரு தண்டா அணிவகுப்பில் ஏந்திச் சென்று பெருமை சேர்த்தார்.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று தடம் பதித்தார்.
2030-ல் கத்தாரில் அடுத்த போட்டி:
அணிகள் அணிவகுப்புக்குப் பின்னர் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் மற்றும் லேசர் காட்சிகளுடன் ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அடுத்ததாக 21-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2030-ம் ஆண்டு கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற உள்ளன. இதனையொட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ கொடியை, ஆசிய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சேக் ஜோன் பின் ஹமது அல்தானி, கத்தார் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

