சென்னையில் முதன்முறையாக நடைபெறவுள்ள 13 நாடுகள் பங்கேற்கும் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ லோகோ (சின்னம்) மற்றும் இந்திய அணியின் ஜெர்சியை (சீருடை) நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில், இந்திய டென்னிஸ் பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சென்னை காரப்பாக்கத்தில் உள்ள KCG கல்லூரியில் வரும் அக்டோபர் 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
தமிழ்நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இத்தொடரில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்காளதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய 13 நாடுகள் களமிறங்குகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, அடுத்த ஆண்டு சுவீடனில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான சின்னம் மற்றும் இந்திய அணியின் சீருடை அறிமுக விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பி.வி.சிந்து சீருடையை வெளியிட்டுப் பேசுகையில்:
"டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சர்வதேச போட்டிகளை நடத்தி வீரர்களின் திறமையை வளர்ப்பதோடு, அவர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சுமார் 300 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இது போன்ற தொடர்களைத் தொடர்ந்து நடத்தி அதிக வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சம்மேளனத் தலைவர் அபினவ் நாத் திவாரி, பொதுச்செயலாளர் இம்ரான் அகமது, தமிழ்நாடு டென்னிஸ் பந்து சங்கச் செயலாளர் ஞானவேல், இணைச் செயலாளர் தங்கராஜ், ஆசிய போட்டி அமைப்புக் குழுவின் தலைவர் ஏ. சிவராமன், இயக்குநர் முனிரத்தினம் உட்படப் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

