தூத்துக்குடி மாநகராட்சியில் ‘யுகே பேக்ட்’ திட்டத்தின் கீழ், ‘ஐடிடிபி இந்தியா’ அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் "ஆரோக்கியமான சாலைகள் கொள்கை மற்றும் தெரு வடிவமைப்பு வழிகாட்டுதல்கள்" தொடர்பான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கில் பங்கேற்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகவும், வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக மையமாகவும் உள்ளது. மாநகர எல்லைக்குள் சுமார் 76 கி.மீ. தொலைவிற்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. எனவே, துறைமுக நகரத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஏற்பப் போக்குவரத்து உட்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஏற்கனவே கடற்கரை மேம்பாடு, தேசிய தூய காற்றுத் திட்டத்தின் கீழ் தொடர் நடைபாதைகள் அமைத்தல் மற்றும் மின்சார வாகனப் பயன்பாடு போன்ற பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பயன்பாட்டு வசதிகளை ஒருங்கிணைப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போது நடைபெற்று வரும் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்களில் நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், போக்குவரத்து காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் தொடர்புடைய துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும், போக்குவரத்து சிக்னல்களின் நேர நிர்ணயத்தில் பாதசாரிகளின் தேவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா பேசுகையில், "மோட்டார் வாகனமற்ற போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பல்வேறு அரசுத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும். நகரத்திற்கான ஒருங்கிணைந்த பார்வையை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றிணைந்து செயல்பட இப்பயிலரங்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது," என்றார்.

பயிலரங்கின் தொடக்கமாக எதிர்காலத் திட்டமிடல் குறித்த கையேடுகள் வெளியிடப்பட்டன. மக்களை மையமாகக் கொண்ட சாலை வடிவமைப்பு, பொதுப் போக்குவரத்துடன் ஒருங்கிணைப்பு, மோட்டார் வாகனமற்ற போக்குவரத்து வலையமைப்பு திட்டமிடல் மற்றும் பசுமை வழித்தடங்கள் அமைத்தல் குறித்து பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில், மாநகராட்சி பொறியியல் துறை, நெடுஞ்சாலைத் துறை, அரசுப் போக்குவரத்து கழகம், குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம், நகர ஊரமைப்புத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.