திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அந்தோணி ஜெனிபர் (35). இவர் கடந்த 2013-ம் ஆண்டு இளைஞர் காவல் படையில் தேர்வாகி, பின்னர் 2016-ல் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தார். மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் பணியாற்றி வந்த இவர், தற்போது தலைமைக் காவலராக (ஏட்டு) பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அந்தோணி ஜெனிபர், வி.கே.புரம் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கடைக்குச் சென்றபோது அவனிடம் நைஸாகப் பேசி மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அச்சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், தனது பெற்றோரிடம் நடந்து சம்பவத்தைக் கூறி அழுதுள்ளான். இது குறித்து மாணவனின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் அந்தோணி ஜெனிபர் சிறுவனை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த போலீஸ் ஏட்டு அந்தோணி ஜெனிபர் உடனடியாகத் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான போலீஸ் ஏட்டைப் பிடிக்க போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.