நாடு முழுவதும் வணிகர்களுக்கு ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது என்ற முடிவு குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்குச் சிறு, குறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைக்கான எம்.டி.ஆர் (MDR) எனப்படும் கட்டண வசூலை நியாயப்படுத்திப் பேசிய அசோக் குமார் லஹிரி தெரிவித்ததாவது: "யுபிஐ மூலம் 100 ரூபாய் பரிவர்த்தனை செய்யும் போது அதற்கு 40 பைசா கட்டணம் செலுத்துவது என்பது மிகக் குறைந்த அளவே ஆகும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு எப்போதும் இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு 40 பைசா கட்டணம் செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டீர்கள்" எனக் கூறினார்.
ரூ. 2,000-க்கு மேல் செலுத்தினால் கட்டணம் என்ற நடைமுறை சாதாரணக் குடும்பங்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பெரிதும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
அதேநேரத்தில், ரூ. 75 ஆயிரத்திற்கு மேல் எந்தத் தொகை பரிவர்த்தனை செய்தாலும் அதிகபட்சக் கட்டணமாக ரூ. 300 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. "அதிகத் தொகை பரிவர்த்தனை செய்வோருக்கு மட்டும் கட்டணம் என நிர்ணயிக்காமல், எப்போதும் ஏழை மக்களும் சிறு வணிகர்களுமே பாதிக்கப்படும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது ஏன்?" எனப் பல்வேறு அமைப்புகளும் சிறு வணிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யார் இந்த அசோக் குமார் லஹிரி?
நிதி ஆயோக் உறுப்பினரான அசோக் குமார் லஹிரி, மேற்கு வங்க மாநில பாஜக எம்.எல்.ஏ.வாகவும், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், 15-வது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

