ஏழை மாணவியர்களுக்கென்றே பிரத்யேகமாக 1823-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பள்ளி பாளையங்கோட்டை மேரி சார்ஜண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பிரபலமான இப்பள்ளியில் தற்போது சுமார் 1,500 மாணவியர் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கலந்து கொண்டு, விதைப்பந்து தயாரித்தல், விதைகள் சேகரிப்பு, மரங்களின் அவசியம் மற்றும் பூமியைக் காக்க மனித இனம் செய்ய வேண்டிய முக்கியக் கடமையான விதைப்பந்து தயாரித்து வீசுதல் ஆகியவை குறித்து மாணவியர்களுக்கு விரிவாக விளக்கினார். தொடர்ந்து, ஒவ்வொரு மாணவியரும் தலா 100 விதைப்பந்துகளைத் தயார் செய்து எறியத் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, பள்ளித் தலைமையாசிரியை பியூலா அன்னமணி வசந்திக்கு 'பசுமைப் பங்காளர்' விருதினை வெங்காடம்பட்டி பூ. திருமாறன் வழங்கிப் பாராட்டினார்.பள்ளித் தலைமையாசிரியை பியூலா அன்னமணி வசந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பசுமைப் படை ஆசிரியை ஜெயவர்தனா வரவேற்புரை நிகழ்த்தினார்.

நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஷீபா ரஞ்சிதம், அஸ் குயித் மற்றும் உதவித் தலைமையாசிரியைகள் ரோத்தா கேசரி, சுமதி, ஜெய வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அம்பை காந்தி, பசுமை ஜவகர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மாணவியர் மிகுந்த உற்சாகத்துடன் விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.