விஸ்வபிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தியாகராஜ பாகவதர் சிலைக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதானது: "சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. மேலும் அப்பகுதியில் ஏராளமான மீனவக் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அங்குத் தலைமைச் செயலகம் அமைப்பதால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழும் என்பதோடு, கடற்கரைச் சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்தகைய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தலைமைச் செயலகம் அமைக்க முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மாற்று ஏற்பாடுகளைச் செய்வார் என நம்புகிறேன். பரந்தூரில் விமான நிலையம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் எனத் தேர்தலுக்கு முன்பே குரல் கொடுத்த விஜய், முதலமைச்சரான பிறகு அத்திட்டத்தை நிராகரித்தார்.

அதேபோல், புதிய தலைமைச் செயலக விவகாரத்திலும் கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கருத்துகளைக் கேட்டு அவர் மறுபரிசீலனை செய்து நல்ல முடிவை எடுப்பார். முதலமைச்சரை நான் முதன்முறையாகச் சந்தித்தபோதே, திருச்சியை மையமாகக் கொண்டு 2-வது தலைநகரம் அமைக்க வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டத்தையே கோரிக்கையாக முன்வைத்தேன் என்றார்.

மேலும், அரசியலில் தனிநபர் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், திமுக மற்றும் பாஜகவின் போக்கைக் கடுமையாக விமர்சித்தார். இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவு சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், அம்முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.