"இந்தியாவின் பசுமை மெத்தனால் மற்றும் பசுமை அமோனியா ஏற்றுமதி சூழமைப்பில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முன்னணி பங்கு" என்ற முதன்மை கருப்பொருளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெற்றது.

இதில் மூத்த அரசு அதிகாரிகள், தொழில் துறைத் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் திரளாகப் பங்கேற்றனர். இந்தியாவில் உருவாகி வரும் பசுமை எரிபொருள் உற்பத்தியில் துறைமுகங்கள் வகிக்க வேண்டிய முக்கியப் பங்கு குறித்தும், பசுமை மெத்தனால், பசுமை அமோனியா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வசதிகள் குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

தொடக்க அமர்வில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டு, இந்தியாவின் பசுமை கடல்சார் மற்றும் பசுமை எரிபொருள் தொலைநோக்கு திட்டம் குறித்து உரை ஆற்றினார்.

மேலும், மத்திய அமைச்சகச் செயலாளர்விஜய் குமார், இணைச் செயலாளர் எஸ். வெங்கடேசபதி, மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் இயக்குநர் அபய் பக்ரே ஆகியோர் துறைமுகங்களின் தயார்நிலை குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து அறிமுக உரையாற்றினார். துறைமுக ஆணைய முதன்மை ஆலோசகர் தேபி பிரசாத் தாஸ், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் துறைமுகத்தின் பசுமை திட்டங்களை விளக்கிப் பேசினார்.

இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மற்றும் தொழில் துறை மாற்றத்தை விரைவுபடுத்தும் அமைப்பு (ITA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்திய பசுமை எரிபொருள் முயற்சிகளுக்கு உலகளாவிய கவனம் கிடைக்கவும் வழிவகுக்கும்.

மேலும், இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய பசுமை எரிபொருள் வழித்தடத்தை அமைப்பது குறித்தும், GH2 India, GIZ மற்றும் போர்ட் ஆஃப் ஆண்ட்வெர்ப்-ப்ரூஜஸ் (Port of Antwerp-Bruges) பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு அமர்வில் ஆலோசிக்கப்பட்டது.

ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ், டால்மியா பாரத், ஓரியானா பவர், ஏவிஎம் கிரீன், ஹைஜென்கோ, ஜென்டாரி, ரீனியூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுப் பசுமை மெத்தனால் மற்றும் பசுமை அமோனியா கொள்முதல், விலை நிர்ணயம் மற்றும் சர்வதேசச் சந்தை வாய்ப்புகள் குறித்து உரையாடினர்.

மாநாட்டின் நிறைவாக வ.உ.சி. துறைமுக ஆணைய முதன்மை ஆலோசகர் தேபி பிரசாத் தாஸ் நிறைவுரையாற்றினார். துறைமுக ஆணையத் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன் நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் வ.உ.சி. துறைமுகத்தின் மெத்தனால் எரிபொருள் நிரப்பும் தளம், துறைமுக பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் தளங்களை நேரில் பார்வையிட்டு உள்கட்டமைப்பு வசதிகளை அறிந்துகொண்டனர்.