தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சமுத்திரம் (40). இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதே ஊரின் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் மகேஷ் (33), கூலித் தொழிலாளி.
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் தீவிர மதுபோதையில் கிராமத்தில் உள்ள கடைவீதிக்குச் சென்றுள்ளனர். அப்போது, இருவரின் கைகளிலும் அரிவாள்களை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த கடைவீதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இது குறித்துப் பொதுமக்கள் உடனடியாகக் கயத்தாறு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் சூரியா, உதவி ஆய்வாளர் காந்திராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்குப் பொதுமக்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமுத்திரம் மற்றும் மகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

