தூத்துக்குடி அருகேயுள்ள தருவைக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (46). இவரது மனைவி குறியீஸ்வரி (35). இந்நிலையில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, முருகன், அவரது சகோதரர் சண்முகசுந்தரராஜ் (41) மற்றும் தாயார் (மாமியார்) பூச்சம்மாள் (75) ஆகியோர் சேர்ந்து குறியீஸ்வரியை வீட்டுக்குள் பூட்டி வைத்துத் தீவிரமாகத் தாக்கியுள்ளனர்.

இதில் குறியீஸ்வரி பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்துக் குறியீஸ்வரி அளித்த புகாரின் பேரில், தருவைக்குளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கணவர் முருகன் உட்பட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 இல் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், சண்முகசுந்தரராஜ் மற்றும் பூச்சம்மாள் ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.