அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளில் யுபிஐ பயன்பாடு மிக அதிகமாக உள்ள நிலையில், யுபிஐ கட்டணங்கள் தொடர்பான விவாதங்கள் சமீப காலமாகத் தீவிரமடைந்துள்ளன. முன்னதாகக் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி முதல் இக்கட்டணம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தீபாவளி பண்டிகை முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வணிகர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கு (Merchant-to-Merchant) ரூ.5 என்ற நிலையான கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என வெளியான தகவலால் வணிகர்கள் மத்தியில் அச்சம் நிலவியிருந்த நிலையில், ரூ.5 கட்டணம் என்ற தகவல் சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது. இருப்பினும், இந்தக் கட்டண முறை எப்போது முதல் அமலுக்கு வரும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
யாருக்குப் பொருந்தும்?
சாதாரணப் பொதுமக்கள் நண்பர்களுக்கோ அல்லது கடைகளுக்கோ யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது இந்தக் கட்டணம் பொருந்தாது. மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என வணிகர்களுக்கு இடையே நடைபெறும் பி2பி (B2B - Business-to-Business) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
வணிகர்களுக்கு இடையே நடைபெறும் யுபிஐ பரிவர்த்தனைகளின் சராசரி மதிப்பு ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய பரிவர்த்தனைகளுக்குச் சதவீத அடிப்படையில் கட்டணம் வசூலித்தால் பெரிய தொகையாக மாறும் என்பதால், எவ்வளவு தொகை அனுப்பப்பட்டாலும் ரூ.5 என்ற நிலையான கட்டணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 0.4 சதவீதக் கட்டணம் என்பது பொதுமக்கள் வணிகர்களுக்குச் செலுத்தும் பி2எம் (P2M) பரிவர்த்தனை சார்ந்ததாகும். ஆனால், தற்போதைய தகவல் வணிகர்களுக்கு இடையேயான (B2B) பரிவர்த்தனைக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தக் கட்டண விதிப்பிற்கு வணிகர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) கட்டமைப்பிலிருந்து வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், இக்கட்டணம் சிறு விற்பனையாளர்களை நேரடியாகப் பாதிக்கும் எனவும், கட்டணத்திற்குத் தனியாக ஜிஎஸ்டி வசூலிப்பது குறித்தும் உரிய முறையில் ஆராய வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

