விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமார் (33). இவருடைய மனைவி மதுமிதா (28). பிரபல யூடியூபரான இவர், சமூக வலைதளங்களில் கட்டுக்கட்டாகப் பணத்துடனும், விதவிதமான நகைகளை அணிந்தும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுப் புகழ்பெற்றவர்.
இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அனந்த நாடார் குடியிருப்பு பகுதியில் வீடு வாங்கி வசித்து வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி மாலையில் இவர்கள் வெளியே சென்ற நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 118 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், இக் கொள்ளையில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரையின் மகன் இசக்கிபாண்டி (30) என்பவரைப் பிடித்துக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இசக்கிபாண்டி, யூடியூபர் மதுமிதா சமூக வலைதளங்களில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து, அவரிடம் அதிக அளவில் பணமும் நகைகளும் இருப்பதைத் தெரிந்து கொண்டு திட்டமிட்டுக் கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
வீட்டில் கொள்ளை நடந்த பின்னரும் சோர்ந்து போகாமல் மதுமிதா தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டதும், அதை லட்சக்கணக்கானோர் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது கைதான இசக்கிபாண்டிக்கு இக் கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் உடந்தையாக இருந்தனரா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

