» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
ஞாயிறு 11, ஜூன் 2023 8:37:11 PM (IST)
காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12,000 கோடி ஊழல் நடைபெற்றது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
வேலூரில் பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்துள்ளார். திருக்குறள் 23 மொழிகளில் மொழிபெயர்க்க காரணமாக இருந்தவர் பிரதமர். தமிழர்களின் தொன்மையான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்தவர் பிரதமர் மோடி. சிஆர்பிஎஃப், நீட் ஆகிய தேர்வுகளை தமிழில் எழுத பிரமர் வழிவகுத்தார்.
9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 3ஆவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய உள்ளது. காசி, குஜராத்தில் தமிழை பரப்பியவர் பிரதமர் மோடி. 11 மாவட்டங்களில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். 2024ல் மீண்டும் ஒருமுறை 300க்கும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். ரூ.50,000 கோடியில் சென்னை-சேலத்திற்கு விரைவு சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் திட்டம் மூலம் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கோடி ஏழை, எளிய மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மெட்ரோ திட்டங்களுக்காக ரூ.72,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் திமுக கூட்டணியில் இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வராதது ஏன். இதற்கு திமுகவினர்தான் பதிலளிக்க வேண்டும். காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12,000 கோடி ஊழல் நடைபெற்றது. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.