» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தீர்ப்பு : ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு

வியாழன் 21, நவம்பர் 2024 5:09:06 PM (IST)

விஷ சாராய வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சியில், விஷ சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த வழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அமர்வு, விஷ சாராயம் தயாரிப்பவர், விற்பனையாளர் மற்றும் காவல் துறையினருக்கு மத்தியில் தொடர்பு இருப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி., நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்து, இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி உள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து பேட்டி அளித்துள்ள சட்டத் துறை அமைச்சர், சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது முறையான வாதங்களை எடுத்துரைத்து தடுத்து நிறுத்துவோம் என்றும், மேல் முறையீட்டுக்கு எப்போது செல்வது என்பதை முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என்றும் கூறி இருப்பது தி.மு.க.வின் நடவடிக்கை மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே தி.மு.க.வுக்கு அக்கறை இருக்குமானால், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பினை ஏற்று, மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இதைச் செய்யாமல், சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார் என்று சொல்வது குற்றவாளிகளுக்கு உதவி புரிவது போல் உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

இது மட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டால், காலதாமதம் ஏற்படும் என்று சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏதோ, சி.பி.சி.ஐ.டி. காலதாமதமின்றி அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது போல அமைச்சரின் கூற்று உள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு 90 நாட்களில் முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கூறினார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 1,276 நாட்கள் கடந்தும் வழக்கு முடிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்பு குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வேங்கைவயல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதுபோன்று பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, சி.பி.சி.ஐ.டி. வசம் இருந்தால் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என்ற அமைச்சரின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.

எனவே, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பினை ஏற்று, 67 உயிரிழப்புகளை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கினை உடனடியாக மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவும், புலன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory