» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!

வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)



வல்லநாடு கல்லூரியில் மாவட்ட அளவிலான 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (31.10.2025) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக "நிலைத்த மற்றும் பாதுகாப்பான நீர் மேலாண்மை” என்ற ஆய்வுத் தலைப்பின் கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2025னை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், துவக்கி வைத்து சிறப்புரையாற்றி, அறிவியல் மாநாட்டில் குழந்தைகள் தயார் செய்து காட்சிப்படுத்திய அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தூத்துக்குடி மாவட்ட அமைப்பும், இந்த மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள் இணைந்து துளசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகின்ற 34-வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு வருகை தந்திருக்க கூடிய அனைவருக்கும் வணக்கம். மாணவர்கள் ஆர்வத்துடன் செயல்பாடுகளை செய்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். அறிவியல் இயக்கத்திலிருந்து நீண்ட நாட்களாக குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் இயக்க நண்பர்கள் வருகின்ற பொழுது, அறிவியலுக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் எப்பொழுதும் கேட்போம்.

அறிவியல் இயக்கத்தின் பணி என்பது தமிழ்நாட்டினுடைய அறிவு வளர்ச்சிக்கு மிக முக்கியமான பணியை, கடந்த 34 ஆண்டுகளாக ஆற்றிக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு அதன் விளைவுகள் குறித்து புரிந்து இருக்குமா? என்ற தெரியவில்லை. தொடர்ந்து, பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் அறிவியல் குறித்த நமது புரிதல்கள், நம்மிடையே உள்ள மூடப்பழக்க வழக்கங்கள் குறித்த அறிவியல் புரிதல்கள், தவறான எண்ணங்களை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ள பெரிய உதவிகளை செய்திருக்கிறது.

தமிழ்நாடு ஒரு அறிவுசார்ந்த பொருளாதாரமான மாநிலமாக வளர்வதற்கு மிக முக்கியமான காரணம் நாம் அறிவியலையும், கணிதத்தையும் அதிகமாக விரும்பி படிக்கிறோம். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மாநிலங்களுக்கிடையே கல்வி வளர்ச்சி ஒரே விதமாக இருந்தது. நமது மாநிலத்தில் என்ன கல்வி இருந்ததோ, அதே கல்வி தான் பிற மாநிலங்களிலும் இருந்தது. ஆனால், காலப்போக்கில் நமது கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களில், குறிப்பாக நமது பள்ளி மற்றும் கல்லூரிகளில் அறிவியலுக்கும், கணிதத்துக்கும் நாம் கொடுத்திருக்க கூடிய முக்கியத்துவத்தின் காரணமாக, நாட்டிலேயே மிக அதிக பொறியியல் வல்லுநர்கள் உருவாகக் கூடிய இடமாக தமிழ்நாடு இருக்கிறது.

இன்று காலையில் பொறியாளர்களுடன் செயற்கை நுண்ணறிவு குறித்த கலந்துரையாடலை நானும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் நடத்தினோம். செயற்கை நுண்ணறிவை எவ்வாறு போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகளில் (traffic Monitoring System) பயன்படுத்துவது? கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் எவ்வாறு பயன்படுத்துவது? என்பது குறித்து அறிவியல் கணினி துறையின் மிக உயரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கலந்துரையாடினோம். 

இந்நிறுவனத்தில் Artificial Intelligence and Cloud என்பதை உலகளாவிய அளவில் பரிசோதிக்க கூடிய தலைமைப் தொழில்நுட்ப பொறியாளர், நமது பள்ளிகளில் படித்து இங்கிருந்து சென்ற தமிழர். இது எதிலிருந்து உருவாகியது என்றால் நமது கல்விக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில், மாணவர்களுக்கு கொடுக்க கூடிய அறிவியல் சார்ந்த புரிதல்கள் மற்றும் அறிவியல் கல்வியை ஊக்குவிப்பதில் இருக்க கூடிய முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதால், காலபோக்கில் நமது மாணவர்களின் மனதில் பதிந்து, தொடர்ந்து படித்தனர். 

ஆகையால் இந்தியாவின் சுதந்திரம் அடைந்த பின்னர், அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில் தான் கல்வியை தொடங்கினர். ஆனால் சில மாநிலங்கள் அறிவியலுக்கும், சில மாநிலங்கள் கலை பிரிவுகளுக்கும், சில மாநிலங்கள் வெவ்வேறு விதமான வணிகம் தொடர்பான பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தன. எந்த விதமான படிப்பும் எதற்கும் குறைந்தது இல்லை. குறிப்பாக நமது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வேறு சில வட இந்திய மாநிலங்கள் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

அறிவியலின் முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினால் இந்த மாநிலங்களில் தான் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்திலும் ஏற்பட்டு அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் இங்குள்ள மாநிலங்களில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து தான் மிக பெரிய பொறியாளர்கள் உருவாகி, உலக அளவிலான தொழில்நுட்பத்தை எல்லாம் வடிவமைப்பதற்கும், மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் தயார் நிலையில் இருக்கின்றனர். 

இந்த மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் தூண்டுவதில், இதுபோன்ற குழந்தை அறிவியல் மாநாடுகள் நடத்துவதும், அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களது செயல்பாடுகளை சமர்பித்து, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என பல்வேறு சிறப்பான பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் கடந்த 34 ஆண்டுகளாக அறிவியல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அறிவியல் இயக்கத்தின் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவியல் மாநாட்டில் குழந்தைகள் ஒரு சிறிய செயல்பாடுகளை செய்து சமர்பித்தாலும், அதன் முக்கியத்துவம் எதிர்காலத்தில் தான் தெரியும். எவ்வாறு ஒரு செயல்திட்டத்தை வடிவமைப்பது? செயல்பாடுகளின் நோக்கத்தினை மற்றவர்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது? முன்மாதிரி எவ்வாறு தயார் செய்வது? இறுதி முழு வடிவத்திற்கு எவ்வாறு மாற்றிக் கொண்டு வருவது? வணிக ரீதியில் எவ்வாறு சாத்தியமாக்குவது? போன்ற பல்வேறு படிநிலைகள் உள்ளது. முதல் இரண்டு படிநிலைகளை புரிந்து கொள்ளுவதற்கு இந்த சிறு வயதில் பங்கெடுக்கின்ற அறிவியல் மாநாடு உங்களுக்கு பெரிய அனுபவமாக விளங்கும். 

நீங்கள் உயர்கல்வி படிக்கின்ற பொழுது, அந்த வளர்ச்சி, புரிதல் மற்றும் பணிக்கு செல்லுகின்ற பொழுது அங்கு மேலும் தொழில்நுட்ப திறனை வளர்த்துக் கொள்ளுவதற்கும், அதனை வெற்றிகரமான திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கும் இது ஒரு நல்ல அனுபவமாக விளங்கும். இந்த நிகழ்வை ஏற்படுத்திருக்கின்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கும், கல்லூரிக்கும், மாணவர்களை ஒருங்கிணைத்து இருக்கின்ற பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் (பொ) சிதம்பரநாதன், தலைவர், துளசி கல்விக் குழுமம் முனைவர் கனகராஜ், நிர்வாக இயக்குநர், வல்லநாடு துளசி கல்விக் குழுமம் அறிவழகன், செயலாளர் மற்றும் முதல்வர், இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முனைவர் ஆல்வின், மாநில ஒருங்கிணைப்பாளர், குழந்தைகள் அறிவியல் மாநாடு தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முனைவர் சுரேஷ் பாண்டி (தூத்துக்குடி), காந்தி (இராமநாதபுரம்), மாவட்ட தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், குழந்தைகள் அறிவியல் மாநாடு – 2025 சாந்தகுமாரி, ஒன்றிய தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஜஸ்டின், மாவட்ட பொருளாளர் கார்த்திகா, மாவட்ட துணைத் தலைவர் அந்தோணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory