» சினிமா » செய்திகள்
இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார்: நாக் அஸ்வினை புகழ்ந்த ரஜினி!
சனி 29, ஜூன் 2024 5:16:41 PM (IST)
இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார் என்று கல்கி 2898 ஏடி திரைப்பட இயக்குநர் நாக் அஸ்வினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. 600 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
படத்தின் விஸ்வல் எஃபக்டுகள் ஹாலிவுட் தரத்தில் மேற்கொண்டுள்ளனர். கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாப்பாத்திரத்தில் சிறிது நேரம் வந்தாலும் மக்கள் மனதில் பதிந்துள்ளார். கல்கி இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், கல்கியை பார்த்தேன். என்ன ஒரு படம். இயக்குனர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார். நாக் அஸ்வின், அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள். இரண்டாம் பகுதிக்காக காத்திருக்கிறேன்', இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களில் 298.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளை வார விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் விரைவில் ரூ. 400 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.