» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மே.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:54:13 AM (IST)



மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்னும், சுப்மன் கில் 129 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 41 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 270 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் விளையாடியது. இறுதியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்கள் எடுத்திருந்தது . ஜான் காம்ப்பெல் 87 ரன்களும், ஷாய் ஹோப் 66 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

4வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தனது 2வது இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 120 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான் கேம்ப்பெல் 115 ரன், ஷாய் ஹோப் 103 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் களம் கண்டனர். இதில் ஜெய்ஸ்வால் 8 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து சாய் சுதர்சன் களம் கண்டார். சுதர்சன் - ராகுல் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இறுதியில் 4ம் நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்தது. 

இந்தியா தரப்பில் ராகுல் 25 ரன்னுடனும், சுதர்சன் 30 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், 29 வது ஓவரில் சுதர்சன் 39 ரன்களுக்கும், 33 வது ஓவரில் கேப்டன் கில் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அரைசதம் கடந்த கே.எல். ராகுல், 36 வது ஓவரில் அணியை வெற்றி பெறச் செய்தார். 

கே.எல். ராகுல் 58, துருவ் ஜூரெல் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory