» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800+ ரன்கள் குவிப்பு: 27 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து சாதனை!
வியாழன் 10, அக்டோபர் 2024 5:08:52 PM (IST)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 27 ஆண்டுகளுக்குப் பின் 800+ ரன்களை இங்கிலாந்து குவித்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்தனர். கிராலி 78 ரன்னில் ஆட்டமிழக்க அவருக்கு பின் வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்து அணி 150 ஓவர்கள் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 267 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் எடுத்தனர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு 800 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது நிகழ்வாகும்.
அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 800 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 27 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ளது. கடைசியாக 1997 ஆம் ஆண்டு இலங்கை அணி கொழுப்பில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 952 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர் சனத் ஜெயசூரியா 340 ரன்கள் குவித்திருந்தார். அதன்பின்னர் தற்போது இங்கிலாந்து அணி 800 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் குவிக்கப்பட்ட அதிக ரன்கள்
849/10 இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகள் (1930)
903/7 இங்கிலாந்து - ஆஸ்திரேலியா (1938)
790/3 மேற்கிந்திய தீவுகள் - பாகிஸ்தான் (1958)
952/6 இலங்கை - இந்தியா (1997)
823/7 இங்கிலாந்து - பாகிஸ்தான் (2024)