» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!

திங்கள் 15, ஜூலை 2024 11:38:26 AM (IST)



ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது.4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் 2 பந்துகளை சிக்ஸருக்கு விளாசினார். ஆனால் முதல் ஓவரின் 4-வது பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கேப்டன் ஷுப்மன் கில் 14 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்த நிலையில், நகாரவா பந்துவீச்சில் கேப்டன் ராஸாவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து விளையாட வந்த அபிஷேக் சர்மா தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவர், முசராபானி பந்துவீச்சில், கிளைவ் மதாண்டேவிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், ரியான் பராக் நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய சாம்சன் 45 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்

ரியான் பராக், 24 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்த நிலையில், பிரண்டன் மவுட்டா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே, 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார். ரிங்கு சிங் 11 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வெஸ்லி மாதவரே,ரன் கணக்கைத் தொடங்காமலேயே முகேஷ் குமார் பந்தில் போல்டானார். அதைத் தொடர்ந்து விளையாட வந்த பிரையன் பென்னட்டையும், முகேஷ் குமார் அவுட்டாக்கினார். பென்னட் 10 ரன்கள் எடுத்தார். மருமணி 27 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த வீரர்களில் பராஸ் அக்ரம் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து விளையாடி 27 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ராஸா 8, கேம்ப்பெல் 4, மதாண்டே 1, பிரண்டன் மவுட்டா 4, பிளெஸ்ஸிங் முசாராபானி 1 ரன் எடுத்தனர். 18.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி ஆட்டமிழந்தது. இதையடுத்து 42 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முகேஷ் குமார் 4, ஷிவம் துபே 2, அபிஷேக் சர்மா, வாஷிங்டன்சுந்தர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஷிவம் துபேவும், தொடர்நாயகனாக வாஷிங்டன் சுந்தரும் தேர்வு செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory