» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வாஷிங்டன் சுந்தர் அபாரம்: ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி!

வியாழன் 11, ஜூலை 2024 12:48:01 PM (IST)



ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் 3-வது ஆட்டம் ஹராரேவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் 4 மாற்றமாக துருவ் ஜூரெல், ரியான் பராக், சாய்சுதர்சன், முகேஷ்குமார் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, கலீல் அகமது சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அவரும், ஜெய்ஸ்வாலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அட்டகாசமாக ஆரம்பித்து வைத்தார். இருவித தன்மையுடன் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் அதற்கு ஏற்ப இருவரும் மட்டையை சுழட்டினர். ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது. பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தனர்.

அணியின் ஸ்கோர் 67-ஆக உயர்ந்த போது ஜெய்ஸ்வால் 36 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய முந்தைய ஆட்டத்தின் ஹீரோ அபிஷேக் ஷர்மா 10 ரன்னில் வீழ்ந்தார். 3-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லும், ருதுராஜ் கெய்க்வாட்டும் கைகோர்த்து அணியை வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தனர். 36 பந்துகளில் கில் தனது 2-வது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடி 18-வது ஓவரில் பிரிந்தது. கில் 66 ரன்னிலும் (49 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்னிலும் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தனர்.

20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 182 ரன் குவித்தது. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 12 ரன்னுடனும், ரிங்கு சிங் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ராசா, முஜரபானி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பீல்டிங்கில் தகிடுதத்தம் போட்ட ஜிம்பாப்வே வீரர்கள் சில கேட்ச் வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர்.

அடுத்து 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது. 39 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதில் கேப்டன் சிகந்தர் ராசா (15 ரன்), வெஸ்லி மாதவெரே (1 ரன்) ஆகியோரும் அடங்குவர். இதனால் அந்த அணி மூன்று இலக்கத்தையாவது தொடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நெருக்கடியான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு டியான் மயர்சும், விக்கெட் கீப்பர் கிளைவ் மடான்டேவும் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பவுண்டரி, சிக்சர்கள் விளாசி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்திய இவர்கள் ஸ்கோர் 100-யும் தாண்ட வைத்தனர். மடான்டே 37 ரன்னில் (2 பவுண்டரி, 2 சிக்சர்), வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கினார். மறுமுனையில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ‘கன்னி’ அரைசதத்தை எட்டிய டியான் மயர்சின் போராட்டம் அந்த அணியின் தோல்வி வித்தியாசத்தை வெகுவாக குறைக்க உதவியது.

20 ஓவர்களில் ஜிம்பாப்வே 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. டியான் மயர்ஸ் 65 ரன்களுடனும் (49 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), வெலிங்டன் மசகட்சா 18 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்திய தரப்பில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். ஆவேஷ்கான் 2 விக்கெட்டும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வேயும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. 4-வது ஆட்டம் இதே மைதானத்தில் வருகிற 13-ந்தேதி நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory